×

எண்களின் ரகசியங்கள்: 33 தேவதைகள் யார்? யார்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண்களின் ரகசியங்கள்

19 என்பது சனி திசையின் வருடங்கள். பொதுவாகவே, இது நம்பிக்கையையும் உண்மையை தேடுவதில் உள்ள வேட்கையும், தர்மத்தின் வழி நின்று வெற்றி பெறுவதையும் குறிக்கக்கூடிய எண். சோதனைக்குரிய ஒரு எண்ணாகவும் கருதப்படுகிறது. காரணம், சனி திசை என்றாலே எல்லோரும் பயப்படுகிறார்கள் அல்லவா. ஆனால், தர்மத்தில் வழி நடந்தால் சோதனைகளை கடக்க வைத்து சாதனைகளைச் செய்ய வைக்கும்.

இந்த எண்: 19 தந்த சோதனையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் உலகம் சந்தித்த அந்த பயங்கரம் நினைவுக்கு வரும். ஒரு நோய் உலகத்தவர்களையே படாதபாடுபடுத்தியது. அந்த நோய்க்கு நம்முடைய மருத்துவ உலகம் வைத்த பெயர் `COVID 19’ தான். வள்ளுவப் பெருந்தகை மழையின் சிறப்பைப் பற்றி சிலாகித்து பாடுகின்ற ஒரு குறட்பா மிக அற்புதமானது.

அது 19-வது குறட்பா;

தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

எண்: 20

சுக்கிரனுக்குரிய திசை 20 வருடங்கள். பொதுவாகவே ஒருவன் பெரிய ஏற்றம் பெறுகிறான் என்றால், “உனக்கு என்ன சுக்கிரதிசையா நடக்கிறது?” என்பார்கள். நவகிரகங்கள் ஒரு மனிதனை ஒரு குறிப்பிட்ட காலம் ஆட்சி செய்கின்றன. அவைகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்கின்ற திசை என்பது சுக்கிரதசை. இந்த உலகத்தில் தோற்றம் என்பது ஐந்தின் அடிப்படையில் அமைந்தது. பஞ்ச பூதங்கள் உருவாவதற்கு முன் ஐந்து தன் மாத்திரைகள் உருவாகும். அதிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாகும். பிறகு பஞ்ச கர்ம இந்திரியங்களும் பஞ்ச ஞானந்திரியங்களும் உருவாகும். இவற்றின் மொத்த எண்ணிக்கை 20.

எண்: 21

விரதங்களிலேயே மிக முக்கியமான விரதம் “கேதார கௌரி’’ விரதம். இந்த கேதார கௌரி விரதம் என்பது 21 நாட்கள் இருக்க வேண்டும். பிரசாதங்களைப் (அதிரசம், அப்பம்) படைக்கும் பொழுது எல்லாமே 21 என்ற எண்ணிக்கையில் படைக்க வேண்டும். ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்கு சொல்லுகின்ற பொழுது 21 தலை முறைகளைச் சொல்லுவார்கள். ஒருவர் இறந்துவிட்டால் அவரை நினைத்து கண்டிப்பாக “மோட்சதீபம்” ஏற்ற வேண்டும் என்பார்கள். அப்படி ஏற்றும் போது 21 தீபங்களை ஏற்றுவார்கள். பரசுராமன் அரசர்களின் 21 தலை முறைகளை பழிதீர்த்தான் என்று புராணத்தில் இருக்கின்றது.

கோக்குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது, என் மனம் நினையாது இனி மற்றொன்றையே

– என்ற பாடல் இந்நிகழ்ச்சியைச் சொல்லும்.

(மூவெழு என்பது, 3×7=21 தலைமுறையைக்குறிக்கும்) நடைமுறையில் ஒருவர் பூத உடைகளுக்கு ராணுவ மரியாதை தரும்போது 21 குண்டுகள் முழங்கும்.

எண்: 22

எண் கணித சாஸ்திரத்தில், 22 என்கிற எண்ணை மாஸ்டர் எண் என்பார்கள். 11,22,33 போன்ற எண்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. 22 என்கிற எண் எல்லையற்ற சாதனைகளைச் சொல்லுகின்றது. ஆனால், இந்தச் சாதனைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் அமைந்திருப்பதை காட்டும் எண்ணாக 22 அமைந்திருக்கிறது. ஆன்மிக பயணத்தில், எண்: 22 பெரும்பாலும் ஆன்மிக விழிப்புணர்வு மற்றும் அறிவாளியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஒருவரின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் நோக்கங்களை உயர்ந்த ஆன்மிக உண்மைகளுடன் சீரமைக்க எண்:22 செயல்படுகிறது.

எண்: 23

ஒரு குழந்தை உற்பத்தியாக வேண்டும் என்று சொன்னால் தாய் – தந்தை இவர்களிடமும், தலா 23 குரோமோசோம் வேண்டும் என்கிறது விஞ்ஞான சாஸ்திரம். இதயத்திலிருந்து புறப்படும் ரத்தம் உடலைச் சுற்ற சராசரியாக 23 வினாடிகள் ஆகும். நாம் வாழும் பூமியின் அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்வு உள்ளது, இதுதான் நமது பூமி பல்வேறு பருவங்களைத் (seasons) தருகிறது.

எண்: 24

12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்கின்ற தொகுப்பு நூல், 4000 பாடல்களைக் கொண்டது. இதில் உள்ள பிரபந்தங்கள் 24. முதல் ஆழ்வார்கள் மூன்று அந்தாதிகளை அருளினார்கள். நம்மாழ்வார், 4 பிரபந்தங்களையும், திருமங்கை ஆழ்வார் ஆறு பிரபந்தங்களையும் இயற்றினார். திருமழிசைஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடி பொடியாழ்வார், தலா 2 பிரபந்தங்கள் அருளிச் செய்தார்கள். மதுகவியாழ்வாரும், திருப்பாண் ஆழ்வாரும் தலா ஒரு பிரபந்தம் செய்தார்கள். ஆக மொத்தம் 24 பிரபந்தங்கள். காயத்திரி மந்திரம் (‘சாவித்திரி மந்திரம்’) விஸ்வாமித்திர முனிவர் இயற்றியது. ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ளது. காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றும் மூன்று வார்த்தைகளின் மூன்று தொகுப்புகளால் ஆனது. இந்த மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் எட்டு எழுத்துக்களைக் கொண்ட மூன்று படிகளைக் கொண்டுள்ளன. வைணவ மரபில், ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு ஆகும்.

ஆன்ம தத்துவங்கள் வருமாறு

பஞ்சபூதங்கள் – நிலம், நீர், காற்று, வானம, நெருப்பு – 5
சூட்சும பூதங்கள் – ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி – 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள்)
ஐம்பொறிகள் – கண், வாய், செவி, மூக்கு, மெய் – 5
செயலுறுப்புகள் – கை, கால், நாக்கு, குதம், குறி – 5
உட்கரணங்கள் – மனம், குணம், அறிவு, அகங்காரம் – 4

24 என்றாலேயே கலப்படம் இல்லாத சுத்தமான தங்கத்தைக் (pure gold) குறிக்கும் (24 கேரட்). ஒரு நாளைக்கு 24 மணி நேரம். திரைப்படங்களிலேயே பொதுவாக ஒரு வினாடிக்கு 24 படங்களை பதிவு செய்வார்கள். நம்முடைய மனித உடல் ஆனது 24 பொருள்களால் ஆனது என்கிறது விஞ்ஞானம்.

எண்: 25

பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், கர்ம இந்திரியங்கள் 5, ஞான இந்திரியங்கள் 5, பிரகிருதி, மாயை, அகங்காரம், மனம் எனும் 24 தத்துவங்களோடு ஆன்மா (ஜீவாத்மா) சேர்ந்தால் 25 தத்துவங்கள் ஆகும். இந்த 25யும் உணர்தல், ஆன்ம விழிப்புணர்வுக்கு அடையாளம். வைணவத்தில் 3 மஹாமந்திரங்கள் உள்ளன. திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம். இதில் `த்வய மஹா’ மந்திரத்தை மந்திர ரத்னம் என்பார்கள். இதில் உள்ள எழுத்துக்கள் 25. இதை மஹாலட்சுமிதாயார் (பெரிய பிராட்டியார்) தம்முடைய அடியார்களுக்கு உணர்த்துவதாக அவள், `வா ழிதிரு நாமத்தில்’ உள்ளது.

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.

25ம் ஆண்டு விழாவை வெள்ளிவிழா என்று கொண்டாடுகிறோம். ஒளி ஒரு மைக்ரோ வினாடி நேரத்தில் 25 செ.மீ.தூரம் பயணிப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.

எண்: 26

வைணவ தத்துவங்கள் மூன்று. இதை `தத்துவத் திரயம்’ என்று சொல்வார்கள். அந்த மூன்று தத்துவங்கள் சித், அசித், ஈஸ்வரன். இதில் அசித் தத்துவங்கள் 24. சித் தத்துவம் (ஜீவாத்மா) 1, ஆக 25. இதற்கு மேலே உள்ள ஈஸ்வர தத்துவம் என்பது 26 ஆவது தத்துவம். நமது நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26-ஆம் நாள். ஆங்கில எழுத்துக்கள் 26.

எண்: 27

நட்சத்திரங்கள் 27.

இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு விருட்சம் உள்ளது. ஒரு தேவதை உள்ளது.

1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. அஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

ராசிச் சக்கரம் 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு ராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால், அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர். முழு ராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப் பிரிவு 13.33 பாகை அளவுள்ளது. 13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்).

(1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்).

எண்கள் 28 முதல் 32 வரை

இனி மற்ற சில முக்கியமான எண்களைப் பற்றி மட்டும் விரைவாக பார்ப்போம். 1. எண்: 28 ஆங்கில மாதங்களில், பிப்ரவரி மாதத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, 2. எண்: 29 என்பது லீப் வருடங்களில் பிப்ரவரி மாதத்தின் நாட்களைக் குறிக்கிறது. 3. எண்: 30, 31 ஆகிய இரண்டு எண்களும் மாதங்களின் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. சில மாதங்களில் 30 நாட்கள். சில மாதங்களில் 31 நாட்கள். திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 30. இது மார்கழி மாதத்தில் நாளுக்கு ஒரு பாடலாக 30 நாட்களுக்கு 30 பாடல்களைப் பாடுகின்ற மரபு உண்டு. திருமங்கை ஆழ்வார் ஆறு பிரபந்தங்களை இயற்றினார். அதில் ஆறாவது பிரபந்தம் திருநெடும் தாண்டகம். இந்த திருநெடும் தாண்டகம் 30 பாசுரங்களைக் கொண்டது.

எண்: 32

எண்: 32 என்பது சில தமிழ் மாதங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது நீண்ட ராசியைக் குறிக்கக்கூடிய மாதங்கள். இந்த ஆண்டில் வைகாசி, ஆடி ஆகிய இரண்டு மாதங்கள் 32 நாட்களைக் கொண்டிருந்தன. சில வருடங்களில் இந்த எண்ணிக்கை மாறும்.

நம் பற்களின் எண்ணிக்கை 32. வேதாந்த தேசிகர் ஒரே நாள் இரவில் ஆயிரம் ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீபாதுகாசகஸ்ரம் என்கின்ற நூலை அருளிச் செய்தார். அதில் உள்ள பத்ததிகள் (அத்தியாயங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்) 32. வைணவத்தில் சரமஸ்லோகத்தில் உள்ள எழுத்துக்கள் 32.

எண்: 33

எண்: 33 அற்புதமானது. மிக நீண்ட வாழ்நாளைச் சொல்லும் போது முப்பது முக்கோடி வாழ்நாள் என்கின்ற கணக்கு உண்டு. தேவதைகள் எண்ணிக் கையைச் சொல்லும் பொழுது 33 கோடி தேவர்கள் என்பார்கள். ஒரு பசுவை பூஜை செய்தால் 33 கோடி தேவதைகளை வணங்கியதாகப் பொருள். ஆண்டாள் பாசுரத்தில் முப்பத்து மூவர் என்கின்ற சொற்றொடர் வருகின்றது.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திரள் உடையாய்

செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்)
சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன்
மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

அது என்ன 33 என்கின்ற கணக்கு?

திருப்பாவையின் உரையில் 33-ன் கணக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 12 சூரியன்கள், 11 ருத்திரர்கள் (ஏகாதச ருத்ரர்கள்), எட்டு வசுக்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் ஆகமொத்தம் 33.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post எண்களின் ரகசியங்கள்: 33 தேவதைகள் யார்? யார்? appeared first on Dinakaran.

Tags : Saturn ,
× RELATED இந்த வார விசேஷங்கள்